Sunday, September 18, 2011

மனைவியிடம் காணவில்லை

கீழ்மட்ட குடும்பத்தில் நான்பிறந்து இருந்தாலும்
மேல்மட்ட பெண்ணொருத்தி என்மீது பாசம்வைத்தாள்
என்னிடம் உள்ளதில் என்னது கவர்ந்ததோ
தன்னையே தரவும் தயங்கினாள் இல்லை
எங்கள் பழக்கம் பலருக்கும் குழப்பம்
உண்மையை சொன்னால் எனக்கே அதிகம்
கூடி முயங்கிய ஒருவேளை தன்னில்
கூறியே விட்டேன் எந்தன் குழப்பத்தை
சிரித்துக் கொண்டே செப்பினாள் பாவை
"உலகில் பிறந்த மாந்தர் அனைவரும்
உரிமையாய் கொள்வர் ஓர்சிறப்பு இயல்பை
உன்னிடம் உள்ள ஏதோ ஒன்று
என்னை உன்பால் கொண்டு வந்தது
உன்குறைகளை எல்லாம் அந்த நிறைகொண்டு நிரப்பி "
நாங்கள் பிரியும் காலமும் வந்தது
அவளயல் நாட்டில் படிக்கச் சென்றாள்
அங்கேயே வாழ்வை அமைத்துக் கொண்டாள்
எங்கள் வீட்டில் பார்த்த பெண்ணை
சம்மத மின்றி மணக்கச் சம்மதித்தேன்
இதோ,
காலங்கள் ஓடிவிட்டன
நானும் பாட்டன் ஆகி விட்டேன்
இன்னும் என்னால் எந்தன் மனையாளின்
என்தோழி என்னிடம் கண்டதாய் கூறிய
அந்த "சிறப்பு இயல்பை"
கண்டு கொள்ள இயலவில்லை (அ)விரும்பவில்லை

Saturday, September 10, 2011

குழந்தை

இந்த உலகத்திற்கு நம்மால் தரமுடிந்த ஒரே   உன்னதம் .              அதனால்தான்,
அனைவரும் பெற்றோராக-விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்- துடிக்கிறோம். நம் வாழ்வு முடிந்தபின்னும் நாம் வாழ்கிறோம், குழந்தைகள் மூலமாக. எப்போது நமக்கு மறுபிறப்பு மறுக்கப்படுகிறதோ, அப்போது நம் பரம்பரை அற்றுப்போகிறது. ஆனால், அந்த பிறப்பில்லா பேரின்ப நிலையை நாம் இக வாழ்வில் மனமுவந்து ஏற்றுக்கொள்ளவே மாட்டோம் என்பது உண்மை. பிறக்கும் குழந்தையின் பாலினம் நம்மை மிகவும் திகைப்பூட்டுகிறது.நாம் எதிர்பார்க்கும் அல்லது விரும்பும் பாலின குழந்தை பெற  இதுவரை அறிவியல் வழிகாட்டவில்லை. இயற்கையின் இந்த ரகசியத்தை அறிவியல் ஒருநாள் வெல்லும்!